Thursday, March 4, 2010

மூன்று அலறல்கள்

இப்போது நாங்கள் நான்காவது மாடியில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கீழ் மற்றும் எதிர் வீடுகளிலிருப்போர் அதிர்ச்சியடையும் வண்ணம் திடீர் திடீர் என எங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது, பகல் நேரங்களிலும் நள்ளிரவு நேர‌ங்களிலும் கூட..


அலறுவது யார்? ஏன்?


*ஆசை ஆசையாய் வாங்கிவந்த புதிய பேனா கரகரவென தரையில் வைத்து கீறப்படுகிறது.


*மெயில் செக் பண்ணிக் கொண்டிருக்கப்படும் போது கீ போர்டில் சர்ரென பிஸ் அடிக்கப்படுகிறது.


*பல் தேய்த்துவிட்டு பேப்பர் பார்க்க பேப்பரை தேடினால் அதற்குள்ளாகவே சுக்கல் நூறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் டாய்லெட் பேப்பராக பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.


*பைக் சாவி வாசல் வெளியில் கண்டெடுக்கப்படும் நிமிடங்களில்..


"ஆஆஆஆஆஆஆவ்வ்வ்.."


அலறுவது நான்.!


*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.


*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.


*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.


*நள்ளிரவில் தோளில் கிடத்திய ஸ்டேன்டிங் நிமிடங்கள் மணிகளாய் மாறும் நேரங்களில்..


"ஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்"


அலறுவது மனோ.!


*தண்ணீரில் அளவளாவ அனுமதி மறுக்கப்படுகிறது.


*வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்படுகிறது.


*புத்தகங்கள், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், செல்போன்கள், சிடிக்கள் போன்றவற்றையெல்லாம் கேட்டவுடனேயே அக்செஸ் செய்துவிடமுடிவ‌தில்லை.


*எவ்வளவு கவனமாக நடந்தாலும் இந்தத்தரை வழுக்கி விழச் செய்துகொண்டேதான் இருக்கிறது.


*நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத்திறந்து உலாத்தமுடிவ‌தில்லை.


*காரணங்கள் வேண்டுமா என்ன, பொழுதே போகாத தருணங்களில்..


"ஈஈஈஈஈஈஈஈய்ய்ய்"


அலறுவது கிச்சு (தி ஜூனியர்).!

No comments:

Post a Comment